உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா?

பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும்.
இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர்.

நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம், ‘கறுப்பு ஜூலை’ என்ற பெயரில் தமிழர்களின் கழுத்தை அறுத்தது. அன்று, யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணிவெடிச் சம்பவத்துடன், எள்ளளவும் சம்பந்தம் இல்லாதவர்கள், யாழில் என்ன நடந்தது என்றுகூடத் தெரியாதவர்கள், தமிழர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக பலியெடுக்கப்பட்டனர்; பழிதீர்க்கப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறையில் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருந்த 54 தமிழ்க் கைதிகள் கொடூரமாக வதைசெய்யப்பட்டு, மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கங்கள் கொடூரமாகக் குத்தி கிழிக்கப்பட்டு, பாய்ந்தோடிய குருதியில் குளித்தனர், கொடியவர்கள். கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் சில ஆயிரம் தமிழர் கொன்று குவிக்கப்பட்டனர்; பல ஆயிரம் தமிழர் அடித்து விரட்டப்பட்டனர்; பல கோடி பெறுமதியான சொத்துகள் சூறையாடப்பட்டன; மிகுதி தீயில் பொசுங்கின. “இது எங்களின் தேசம். நீங்கள் உங்களின் தேசத்துக்குப் போங்கள்” எனக் கழுத்தில் பிடித்துத் தள்ளினார்கள்; கப்பலில் ஏற்றி அனுப்பினார்கள். இது கறை படிந்த வரலாறு.

சிந்திக்கும் ஆற்றலும், எவரையும் சாராது சுயகௌரவத்துடனான தன்மான உணர்வும் பொதுவாகச் சகலருக்கும் இயல்பானது. அது போலவே, தமிழ் மக்களும் தங்களுடைய வரலாற்றுப் பூமியில், மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லாமல், சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழவே விரும்பினார்கள்.

அதேவேளை, தமிழ் மக்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்முதல், தங்களது மண்ணில் கௌரவமாகவும் சிறப்பாகவும் தங்களைத் தாங்களே நிர்வகித்து வந்திருந்தார்கள். ஆனால், 1948ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலங்களில், அவர்களது விருப்பங்கள், அபிலாஷைகள் யாவும், நாட்டைத் தொடர்ச்சியாக ஆண்ட சிங்கள அரசாங்கங்களால் கேள்விக் குறியாக்கப்பட்டன.

நன்கு திட்டமிடப்பட்டதும் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்புடனும் இன்று வரை தொடரும் சிங்களக் குடியேற்றங்கள், தனிச்சிங்களச்சட்டம், கல்வியில் தரப்படுத்தல், நூலக எரிப்பு, பொருளாதார அழிப்பு, கலாசார சிதைவு (திணிப்பு) எனப் பல்வேறு வழிகளிலும் தமிழ் இனம் ஒடுக்கப்படுகிறது, அழிக்கப்படுகிறது எனத் தமிழ் மக்கள் உணர்ந்தனர்; விளைவுகளால் பயந்தனர்.

இவற்றைத் தவிர்த்து, தடுத்துத் தங்களைத் தன்மானத்துடன் வாழ (விடுங்கள்) வகை செய்யுமாறு பல தடவைகள் கோரினார்கள்; கெஞ்சினார்கள். சாத்வீக அஹிம்சை வழிகளில் போராடினார்கள். ஆனால், சர்வ அதிகாரத்தைக் குவித்து வைத்து, ஆட்சி புரிந்தவர்களின் செவிகளில் இவை எதுவுமே கேட்கவில்லை; கேட்கவும் மறுத்தனர்; சிலர் கேட்காதது போல, பாசாங்கு செய்தனர்.

தமிழ் மக்கள், பல ஆண்டுகளாகப் பொத்திப்பொத்தி அடக்கி வைத்த,  கூட்டு உணர்வுகள் (தாயக ஆசை,  இனம் அழிகின்றதே என்ற ஏக்கமும் கோபமும்) வேறு விதமாக வெடித்தன. அன்பாகப் பண்பாக வாழ்ந்தவர்கள், வெகுண்டு எழத் தூண்டப்பட்டனர்; தூண்டி விடப்பட்டனர்.

சகோதர மொழி பேசுவோர் எனக் கூறிக் கொள்வோர், சகோதர இன மக்கள் எனக் கூறிக் கொள்வோர், சகோதரத்துவத்தைக் காட்ட மறுத்தனர்; மறந்து விட்டனர். அன்பு மொழி கேட்க ஏங்கும், ஓர் இனிய அப்பாவி மக்கள் கூட்டத்துக்கு, ஆயுத மொழி பரிசாக வழங்கப்பட்டது.

‘போர் என்றால் போர்; போர்க்களம் வா பார்க்கலாம்’ என வலிந்து இழுத்துச் செல்லப்பட்டார்கள்; ‘அன்பால் என் மனதை நீ வெல்; பதிலுக்கு நானும் உன்னை அன்பால் வெல்வேன்’ என்ற, பௌத்த மதம் கூறும் உயர் பண்பு புதைக்கப்பட்டது. இன, மத வெறியாட்டம் விதைக்கப்பட்டது.

தமிழ் ஆன்மாக்களை, ஆழமாக ஆட்டிய அதிர்வலைகள் அசைந்து, 35 வருடங்கள் உருண்டோடி விட்டன. புனிதம் மறந்து, மனிதம் மறைத்து நடாத்திய கொடூரங்கள் மறக்கப்படக் கூடியவை அல்ல; மன்னிக்கப்படக் கூடியவைகளும் அல்ல. இவைகள், உலகில் தமிழ் கூறும் நல்லுள்ளங்கள் உள்ள வரை, நினைவு கூரப்படும்.

ஆனால், தன்னால் தாங்க முடியாத அளவில், தமிழ்ச் சமூகம் பலதொடர் இழப்புகளைத் எதிர்கொண்டு, இன்றும்கூடத்  தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஒரு கிராமத்தில், ஒரு சமுதாயத்தில் உள்ள யாவரும், ஒரே விதமான கொடூர சூழலுக்கும், கொடும் இன்னல்களுக்கும் உட்படுவதால், கூட்டாகச் சமூக மட்டத்தில் உருவாக்கப்படும் நிலையே, ‘சமூக மனவடு’ எனப்படுகிறது. ஈழத்தில் தமிழ்ச் சமூகம் பல தசாப்த காலமாக, மனவடுவுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் யாவரும், ஏதோவொரு விதத்தில், ‘சமூக வடு’வுக்கு உள்ளாகித் தொடர்ச்சியாகத் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், அவர்கள் யாவரும் தனிப்பட்ட ரீதியாக, உளவியல் நோய்க்கு உட்பட்டவர்கள் அல்லர்.

ஒரு தேசிய இனத்தின் நிலம், மொழி, பொருளாதாரம், பண்பாடு இவற்றுடன் சேர்த்து, அவற்றுக்கு சொந்தக்காரர் (தமிழர்) அழிதலே, அழிக்கப்படுதலே நடந்தது; நடக்கின்றது.

ஆகவே, இதுவே எம் நாட்டின் இனப்பிரச்சினை; இதுவே தேசியப் பிரச்சினை; இதுவே தீராத பிரச்சினை. இதையே தீர்க்க வேண்டும். இதனை விடுத்து, தமிழ் மக்கள் அபிவிருத்தியை வேண்டி நிற்கின்றனர் என்றும் அதை நிவர்த்தி செய்தால் போதுமானது என்ற, பிழையான விம்பத்தை சில சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களுக்குக் காட்டுகின்றனர். சிலர், ‘தமிழ் மக்களுக்கு எமது நாட்டில் என்ன பிரச்சினை’ என்றும் கேள்வி கேட்கின்றனர்.

பெற்றோர்கள் தருவது உணவு; ஆசிரியர் தருவது உணர்வு; அனுபவம் தருவது உயர்வு. இனப்பிரச்சினையின் பல வருடப் பட்டறிவு, பல படிப்பினைகளை வழங்கியுள்ளது.

ஆனாலும், தமிழ் மக்கள் (அவர்களது பிரதிநிதிகள்) தங்களது நீதியான கோரிக்கைகளை முன்வைத்தால், இனவாதம் கதைப்பதாக கூச்சல், குழப்பம் விளைவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களது நியாயமான வாதங்களைத் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் உருமாற்றம் செய்யப்படுகிறது.

இவ்வாறாகத் தொடர்ந்து, ‘குரல்வளை’ நசுக்கியதாலேயே, தமிழ் மக்கள் ‘தனிவளை’ கோரினார்கள் எனச் சிந்திக்கவில்லை. மாறாக, தமிழ்மக்கள் இன்னமும் வளைந்து போக வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

போர் முடிந்த, கடந்த ஒன்பது ஆண்டு காலத்தில், தமிழ் மக்கள் பெரும் உள்ளக் குமுறல்களுடன் கொதித்துக் கொண்டும் கொந்தளித்துக் கொண்டும் இருக்கின்றார்கள். இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு நம்பிக்கைகள் ஏற்படக்கூடிய வகையில் காரியங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

இளம் வயதில் தனது வாழ்வை இழந்த (கணவனை) ஒரு விதவை, தனது அனைத்து ஆசைகளையும் புதைத்து, தனது பிள்ளைகளுக்காக, விதையாக வேராக விழுதாக வாழ்வது போல, தமிழர்கள் வாழ்வு போய் விட்டது.

நாட்டின், ஒரு தேசிய இனத்தின் நியாயமான, நீதியான கோரிக்கைகளை அபிலாஷைகளை முன்வந்து ஏற்று, அவற்றைப் பூர்த்தி செய்து, அதன் ஊடாக அவர்களையும் அரவணைத்து, பங்குதாரர்கள் ஆக்கி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, இலங்கையில் எந்த ஆட்சியாளர்களும் தயார் இல்லை.

தமிழ் மக்கள் தங்களது விடுதலைக்கான போராட்டத்தில் தோல்வி அடையவில்லை; அடையப்போவதில்லை. மாறாகத் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டார்கள்; ஏமாற்றப்படுகின்றார்கள். அன்றைய பண்டா – செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இன்றைய நல்லாட்சி அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை வரை, ஏமாற்றமே மிஞ்சியதாக உள்ளது. சர்வதேச அமைப்புகள், நாடுகள் என அவர்கள் முன்னிலையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் கூட, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக்கியது.

‘ஒப்பந்தத்தில் நிறைவேற்றுவோம்’ எனக் கையொப்பமிட்ட வரைபுகளை, நிறைவேற்றத் தவறுதல், காலம் கடத்துதல், நொண்டிச்சாட்டுக் கூறல் எனப் பல்வேறு வகையிலான ஏமாற்றங்களைத் தமிழினம் கண்டு விட்டது.

மறுபுறத்தே, ஓர் இனத்தின் பல்லாயிரம் மக்களைக் பாதுகாக்க முடியாமல் அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டது. தமிழ் மக்களது அடிப்படை பிறப்புரிமைகளை நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடைந்துள்ளார்கள்

ஆனால் இவையெல்லாம், தங்களுக்கான பெரும் தோல்விகளாகச் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையில் திளைத்து மூழ்கி உள்ளவர்கள், இன்னும் கருதவில்லை; இன்றும் கருதவில்லை; வருங்காலத்திலாவது கருதுவார்களா?

காரை துர்க்கா